Friday, March 30, 2007

பூனைக்கு மணி.. நிறைவுப் பகுதி

V

முதலில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றவர்கள் நடப்பிலிருக்கும் அனைத்து இடஒதுக்கீடு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 60 ஆண்டுகாலமாக நடப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது, இனியும் தாமதிக்கக்கூடாது என்று அத்வானி சொன்னதை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும். மூவாயிரம் ஆண்டுகளாக நாட்டின் வளங்களையும் அதிகாரத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்கள் அதில் ஒரு சிறு பங்கை இழந்ததற்கே இத்தனை கூப்பாடு. பௌத்த மன்னர்களின் கீழ் இழந்த தனித்துவத்தை மீட்பதற்கு கொலைவாளேந்திய புஷ்யமித்ர சுங்கன் என்னும் பார்ப்பனன் கண்ணில் தெறித்த வெறி இன்னும் அடங்கவில்லை.

இவ்வளவு முட்டியும் இடஒதுக்கீட்டைத் தடுக்க முடியாத நிலையில் இப்போது கிரீமி லேயர் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இடஒதுக்கீட்டின் பலன்களை வசதியானவர்களே வளைத்துக் கொள்வார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இடஒதுக்கீட்டில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவெடுப்பது இடஒதுக்கீட்டின் பயனாளிகள் உரிமை. அதிலும் தலையிடுவதும், தாங்கள் சொல்கிறவர்களுக்கே தரவேண்டும் என்பதும் அப்பட்டமான ஆதிக்கசாதி கொழுப்பு.

உண்மையில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதே பெரும்பாலான பார்ப்பனரல்லாத சாதியினருக்குத் தெரியாது. (அதை Iyer iyenkar technology என்று புரிந்துகொண்டு ஒதுங்கியவர்களும் உண்டு.) எனவே அவர்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை. இந்த சாதியினரிலேயே ஓரளவேனும் படித்து வேலையிலிருக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்குத்தான் இந்த விவரத்தையெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தவிரவும் இப்படியான உயர்படிப்புகளுக்கு தன் பிள்ளையை தயார்படுத்தத் தேவையான தொகையை (குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம்) செலவழிக்கவும்கூட அவர்களால்தான் முடியும். ஆனால் அவர் கிரீமி லேயராகி வெளியே நிறுத்தப்பட்டுவிடுவார். சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் சவரத்தொழிலாளர் அல்லது சலவைத்தொழிலாளர் குடும்பத்திலிருந்து தக்கிமுக்கி ஒருவர் படித்து ஒரு இடைநிலை ஆசிரியராகி, அதே வேலையிலிருப்பவரை திருமணம் செய்து கொள்வாரெனில் அவர்களிவரும் அன்றிலிருந்தே கிரீமிலேயராகிவிடுவார்கள். எனில் ஒதுக்கீடு வந்தாலும் தகுதியான மாணவர் இல்லை என்று அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாத நிலை ஏற்படும். இந்த தந்திரத்தின் தொடர்ச்சியாகத்தான், பூர்த்தியாகாத கோட்டா இடங்களை பொதுஇடமாக அறிவித்து நிரப்பவேண்டும் என்று அசமத்துவத்திற்கான இளைஞர் குழு கோரியது. உச்ச நீதிமன்றமும் இதையே தீர்ப்பாக கூறியுள்ளது.

நடப்பிலுள்ள அனைத்து கோட்டா முறைகளையும் மறுபரிசீலனை செய்து ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்துக் கொள்ளவேண்டுமென்றும், தகுதியானவர்கள் இல்லாமல் ஏற்படும் காலி இடங்களை பொதுஇடமாக அறிவிக்க வேண்டுமென்பதும் யூத் பார் (அன்)ஈக்வாலிட்டியின் அடுத்த கோரிக்கை. உச்சநீதி மன்றம் மிகுந்த பெருந்தன்மையோடு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்குமாறு பணித்துள்ளது.

இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு சமூகநீதிக் கோட்பாட்டையும் அதன் சாதனைகளையும் ஒரு நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான கடைசி அஸ்திரத்தை நீதிமன்றங்களுக்குள் ஒளிந்துகொண்டும் எய்கிறார்கள். வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்பரெட்டி என்று விதிவிலக்காய் ஓரிருவர் இருந்த காலங்கள் தவிர்த்து அனேகமாக மற்றெல்லா நேரங்களிலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாய் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். யூத் பார் (அன்)ஈக்வாலிட்டி உறுப்பினர்கள் கோருவதெல்லாம் தீர்ப்பாக வருமெனில், பூணூலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக நாட்டின் எல்லா அமைப்புகளும் தன்னுணர்விலேயே மாறிக் கிடக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பெரியார் மொழியில் கேட்பதெனில் அது உச்ச நீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா? யூத் பார் (அன்) ஈக்வாலிட்டியின் வழக்கறிஞர் பிரிவைப்போல நீதிமன்றங்கள் கீழிறங்கி வரக்கூடாது என்ற நமது பேராசையில் வண்டிவண்டியாய் மண்விழுகிறது.

பார்ப்பனிய ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபங்கீடு செய்வதற்கான தொடக்க முயற்சியே இடஒதுக்கீடு. இது விரிவடைந்து செல்லவேண்டிய தளங்கள் அனேகம் உண்டு. இடம் என்பதை வெறுமனே கல்வி வேலைவாய்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாட்டின் இயற்கைவளங்களான நிலம்- நீர் நிலைகள், பொது சொத்துக்களான கல்வி நிலையங்கள்- சாலைகள்- போக்குவரத்து வாகனங்கள்- மின்சாரம்- தகவல் தொடர்பு சாதனங்கள்- மருத்துவமனைகள், நிதிநிறுவனங்களான வங்கிகள்- காப்பீடுகள், ஒப்பந்தங்கள், பண்பாட்டுக் கூறுகளான கலை இலக்கியம், பண்டிகைகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இடமாக வரையறுக்கப்பட்டு அவை ஒரு நீதியானமுறையில் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய நிலையில் ஒரு உடைப்பை ஏற்படுத்த நிலச்சீர்திருத்தம் தேவை என்னும் இடதுசாரிகள் கருத்தையே மண்டல் குழுவும் பரிந்துரைத்திருப்பது குறித்து சமூகநீதி ஆர்வலர்கள் கவனங்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்றாலே அது தலித்களுக்கானது என்றெண்ணி அவர்களை கோட்டா பிள்ளைகள், கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்று ஏளனம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் இப்போதாவது தெளிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிற தாங்களும் கோட்டா பிள்ளைகளே என்பதையும் அது இழிவானதல்ல என்பதையும் உணரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை சமமாக கருதுவதற்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்தார்களோ அதே காரணங்களைச் சொல்லித்தான் பார்ப்பனர்கள் இன்று பிற்பட்டோரை இழிவுபடுத்துகின்றனர். பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர், குற்றப்பரம்பரையினர் என்ற வகைப்பாட்டிற்குள் நின்று இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்துக் கொண்டே தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். இந்த ரட்டைக்குதிரைச் சவாரி ஆசை நிச்சயமாக இலக்கையடைய உதவாது.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

சாதி என்கிற வெற்றுக் கற்பிதத்தை முன்வைத்து ஒவ்வொரு சாதியும் மற்றவர்களை ஒடுக்கும் மனநிலைக்கு இந்திய சமூகத்தை ஆட்படுத்தியது மனுநீதி என்றால், அதன் கேடுகள் யாவற்றிலிருந்தும் விடுபடுவதற்கான முன்னிபந்தனையாக இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது சமூகநீதியாகும். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையேயான போராட்டத்தில் நீ எந்தப்பக்கம் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் யாரும் தப்பித்துவிட முடியாது. இருதரப்பிலும் சில நியாயங்கள் இருப்பதாகப் பேசுகிறவர்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாமல் தீர்வு சொல்வதாய் பல்லிளிப்பவர்கள், ‘ஆனால்...’ என்று இழுக்கிறவர்கள் எல்லோரும் முன்வைக்கும் வாதங்கள் தவிர்க்க முடியாமல் இடஒதுக்கீட்டை மறுப்பதாகவே இருக்கின்றன. இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு என்பதை ஒப்புக்கொள்ளத் தயாரில்லாத சாதிவெறியர்களை சமாதானப்படுத்தும் கேடுகெட்ட முயற்சியாக உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனைகளும் வெளிவருகின்றன.

இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.

இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வைக்கும் வாதங்களுக்குள் மறைந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியை அம்பலப்படுத்தவும், சமூகநீதிக் கோட்பாட்டை சமரசமின்றி செயல்படுத்துமாறு அரசை நிர்ப்பந்திக்கவும் தேவையான கருத்தியல் போராட்டம் எல்லா முனைகளிலும் வீறுடன் நடத்தப்பட வேண்டும். ஒத்தக் கருத்துள்ளவர்களை திரட்டவும் உடன்படாதவர்களோடு விவாதிக்கவும் இணக்கம் கொள்ளவைக்கவும் நடத்தவேண்டிய இப்போராட்டத்திற்கான தத்துவ பலம் மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளில் பொதிந்திருக்கிறது.
-முற்றும்-

நன்றி:- கீற்று

0 comments: