Friday, March 30, 2007

பூனைக்கு மணிகட்டும் காலம்.

பூனைக்கு மணி கட்டும் காலம்

ஆதவன் தீட்சண்யா



மக்களாட்சித் தத்துவம் உலகின் பெரும்பாகத்தில் செல்லுபடியாகிவிட்ட நிலையில் தாம் இன்னும் மன்னனின் கீழிருப்பதா என்று நேபாள இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயகத்துக்காக போராடினர். வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளையும் பறிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பிரான்ஸ் இளைஞர்களும் மாணவர்களும் போராடினர். இதே காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக/அவர்களை விடவும் தீவிரமாக நாட்டுநலனை முன்னிறுத்தி இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஒருமித்து போராடுவதை போல ஆங்கில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றின.

என்.டி.டி.வி சேனலும் அதிலிருந்து துரத்தப்பட்ட/வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாயால் விரிக்கப்பட்ட புதிய கடையான சிஎன்என்-ஐபிஎன் சேனலும் ஏழேழு லோகத்திலும் இதை விட்டால் வேறு பிரச்னையே இல்லை என்பது போல இந்த நாடகத்தின் காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்தன. ஆங்கிலம் தெரிந்த நடுத்தர, உயர்வகுப்புப் பார்வையாளர்களை யார் கவர்ந்திழுப்பது/தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டி, பரபரப்பான செய்திகளை வெளியிட்டு பிரபலமாகி விளம்பரங்களில் அள்ளிக் குவிக்கிற வியாபார உத்தி, இவற்றோடு இந்திய செய்தி ஊடகத்தின் இயல்பாக ஊறி நொதித்து நாறும் உயர்சாதி மனோபாவமும் சேர்ந்துவிடவே, இச்சேனல்களின் ஒளிபரப்பில் ஆத்மார்த்தமானதொரு சுய ஈடுபாடு வெளிப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களும் விஷம் கக்கின. அந்த இளைஞர்களின் தரங்கெட்ட செயல்கள் யாவும் போராட்டங்களென சித்தரிக்கப்பட்டன. (இந்தக் கூத்து இன்றளவும் தொடர்கிறது.)

உண்மையில் உயரிய நோக்கங்களுக்காக - அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக பெரும்பான்மை எளிய மக்களால் நடத்தப்படுவதே போராட்டம். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஆதிக்க கும்பல் தெருவிலிறங்கினால் அதை ரகளை/காலித்தனம் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். எனவே அரசியல் சட்ட அடிப்படையில் பிற்பட்டோருக்கு உயர்கல்வியில் 27 சதம் இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்த இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதரவில் நேரடி ஒளிபரப்புக்காக நடந்த ரகளை என்றே வகைப்படுத்த முடியும். ரகளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் எப்போதும் ஏந்தி வருகிற கத்தி கபடா சோடா பாட்டில் சுருள் பிச்சுவா சைக்கிள் செயினுக்குப் பதிலாக இம்முறை அவர்கள் கையில் தொலைக்காட்சிக் காமிராக்கள் இருந்தன. ஏனென்றால் இப்போதைக்கு அவர்களுக்கு எவரின் உயிரும் தேவைப்படவில்லை. மக்களின் மனங்கள்தான் அவர்களது இலக்கு. ஒரு நூற்றாண்டு காலமாக கருத்தளவிலும் நடைமுறையிலும் செயலூக்கத்துடனிருக்கும் இடஒதுக்கீடு குறித்து ஒரு சர்ச்சையை கிளப்புவதே அவர்களது உடனடி நோக்கம். இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் மீண்டும் ஒருசாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அவர்களது அகண்ட கனவிற்கான ஒத்திகையும்கூட இதற்குள் மறைந்திருக்கிறது.

பதினாறாண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியிருக்க வேண்டிய ஒரு அரசியல் சட்டக்கடமை என்ற அடிப்படையில் உயர்கல்வியில் பிற்பட்டோருக்கு 27 சதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு வெளியான கணத்திலிருந்தே அவர்கள் இந்த ரகளையைத் தொடங்கிவிட்டனர். சர்வசதா காலமும் பிறசாதிகள் மீதான துவேஷத்துடனேயே வளர்க்கப்படுவதால் யாரையும் யாரும் அணிதிரட்ட வேண்டிய அவசியமில்லாமலேயே தெருவுக்கு வந்தனர். வெளித்தோற்றம் என்னவாயிருந்தாலும் தன்னுணர்வாக மண்டிக்கிடக்கும் உயர்சாதி அகங்காரமும் இடஒதுக்கீட்டு எதிர்ப்புணர்வும் அவர்களை தெருவுக்கு கிளப்பிக் கொண்டு வந்தது.

அடுத்த வீட்டு பொம்மையை எடுத்து விளையாடும் குழந்தைகூட உரியவர்கள் கேட்டதும் திருப்பித் தந்துவிடுமளவுக்கு நியாயவுணர்ச்சி கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களோ தாம் இத்தனை நாளும் ஆக்ரமித்து வைத்திருந்ததை உரியவர்கள் எப்படி கேட்கலாம் என்று அதட்டுமளவுக்குச் சென்றனர். பாடுபட்டு ஈட்டிய தமது கைப்பொருள் பறிபோவதைப் போன்ற பதற்றத்துடனும் ஆத்திரத்துடனும் ஏசினர். இந்த ரகளையில் புதுடில்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பிற்பாடு நாடு முழுவதுமிருக்கிற ஐஐடி, ஐஐஎம் மாணவர்களில் ஒருபகுதியினரும் இணைந்து கொண்டனர். இதன் பொருள் மாணவர்கள் மட்டுமே இந்த ரகளையை நடத்தினர் என்பதல்ல. சாதியமைப்பினூடே அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் பொருளாதார நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வெறியேறிய அனைவருமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்றனர். இந்த தருணத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட தம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அதை மிகவும் விருப்பப்பூர்வமாக அனிச்சையாக செய்வதில் ஆர்வம் காட்டினர். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அயல்நாட்டில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் சாதிநலனைக் காப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களில் அவர்களுக்கிருக்கும் சாதிய செல்வாக்கு இதற்குப் பேருதவியாக அமைந்தது.

ஒரு வழக்கின் இருதரப்பையும் கண்டறிந்து நடுநிலையாக செய்தியளிக்கும் தார்மீக நெறிமுறைகள் தமக்கிருப்பதாக வெகுவாக அலட்டிக் கொள்ளும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இவ்விசயத்தில் எல்லாவற்றையும் உருவியெறிந்துவிட்டு ஒற்றைப் பூணூலோடு அம்மணமாக நின்றன. யூத் பார் ஈக்வாலிட்டி என்று அவர்கள் போர்த்திவந்த பதாகையால்கூட மறைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அம்மணமாய் நின்றன. கட்சித் தலைவர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் ஸ்டுடியோவுக்கு அழைத்து குறுக்கு விசாரணை போல துருவித் துருவி பேட்டியெடுக்கும் இந்த புலனாய்வுச் செய்தியாளர்கள் அந்த மாணவர்களின் உளறல்களை சிறு குறுக்கீடோ மறுப்போ இல்லாமல் போர்ப்பிரகடனங்களைப் போல ஒளிபரப்பினர். நேரடி விவாதங்களின்போது இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த போதிய கால அவகாசம் தரப்படாமல் மைக்குகள் பறிக்கப்பட்டன. எதிர்ப்பாளர்களுக்கோ விலாவாரியாக அவதூறு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற எந்த இயக்கத்தையும் ஒளிபரப்ப முடியாதளவுக்கு அல்லது ‘முன்னாபாய்கள் ஊர்வலம்’ என்று கிண்டலடித்து ஒளிபரப்புமளவுக்கு வெளிப்படையாகவே செயல்பட்டன. யூத் பார் ஈக்வாலிட்டி- சமத்துவம் என்று முழங்கும் இந்த மாணவர்கள் இதுவரை சமூகத்தில் நிலவிய எந்தெந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடி கிழித்திருக்கின்றனர், எங்கெங்கெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கின்றனர் என்பது போன்ற எளிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் வகையில் பேசக்கூடிய பத்துப்பேரை இழுத்துவந்து இங்கிலீசில் பொளந்து கட்டினார்கள். புலம்பியும் தீர்த்தார்கள். ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்ற நிலையிலிருந்து வெகுவாக இழிந்து பிரச்னையில் தொடர்புடைய இருசாரரில் ஒருதரப்பாக மாறி வாயில் நுரைதள்ள வாதிட்டன.

உழைக்கும் மக்கள் எவ்வளவு நியாயமான காரணங்களுக்காகப் போராடினாலும் பொதுஅமைதிக்குப் பங்கம் நேர்வதாகவும் மக்கள் அவதியுறுவதாகவும் வரிப்பணம் வீணாவதாகவும் அரற்றித் திரியும் ஊடகங்கள் இவ்விசயத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்தன. அதாவது ஆதரவாக இருந்தன. பணிக்கலாச்சாரம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் பொதுநல விரும்பிகளும் உண்மை விளம்பிகளும், போண்டாவில் உப்பில்லை புண்ணாக்கில் சத்தில்லை என்று பொதுநல வழக்கு தொடுக்கிறவர்களும்கூட இம்முறை பொத்திக் கொண்டு சும்மாயிருந்தனர். ஒரு பேரணியினால் தன் பயணம் சற்றே தாமதித்து விட்டதற்காக ஊரில் ஒருவனும் பேரணி நடத்தக்கூடாது என்று (யாரும் வழக்கே போடாத நிலையில்) தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் கூட, சில மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் நடத்திய அட்டூழியங்களில் தலையிட முன்வரவில்லை. வேலைநிறுத்தம் செய்கிற நாட்களுக்கு No Work No Pay என்று கடந்த காலங்களில் நியாயம் பேசிய நீதிமன்றங்கள் ரகளை செய்த இந்த மருத்துவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ததற்கு அரசையே கடுமையாக எச்சரித்ததுகூட ஏனென்று யாருக்கும் விளங்கவில்லை.

இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி. எனவே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதென்பது அரசியல் சட்டத்தையே எதிர்ப்பதுதான். நேரடியான அர்த்தத்தில் அது ஒரு தேசவிரோதச் செயல். ஆனால் இந்த தேசவிரோதிகள் நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தற்கொலை என்கிற மனப்பிறழ்வுக்கு முறையான உளவியல் சிகிச்சைக்கும், இந்த மிரட்டல் போக்கிற்கான தண்டனைக்கும் உத்திரவிடுவதற்கு பதிலாக ‘பரிவோடு கவனிப்பதாக’ குடியரசுத்தலைவரும் ஆறுதல் கூறினாரென செய்திகள் வெளியாயின. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்புணர்வை கைவிட்டு சாதிவெறியேறி தெருவுக்குள் உலும்பித் திரிந்த அந்த மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, இடஒதுக்கீடு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர் பலமுனைகளிலும். குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வேண்டியதை கொள்ளையிட்டுப் போகும் கயமைக்கு குறைவற்றது இந்த கனவான்களின் செயல். தங்களது சாதிநலனை காத்துக் கொள்ள எவரது உயிரையும் பலி கொடுக்கத் தயங்காதவர்கள் என்பது மறுமுறையும் உறுதியானது.

II

நடந்த சம்பவங்களின் மீது எதிர்வினை புரிய விரும்பும் சமூகநீதி ஆர்வலர் எவரொருவரும் ‘சமத்துவத்திற்கான இளைஞர் குழு’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்தே தன் பணியைத் தொடங்க வேண்டியிருக்கும். ஹிட்லனும் முசோலினியும் கோர்ப்பசேவும் எல்ட்சினும் சோசலிசம் என்ற போலி முழக்கத்தோடு செயல்பட்டதற்கு இணையான மோசடிதான் இவர்கள் சமத்துவம் என்று பேசுவதும். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு சமத்துவம் என்ற சொல்லும் பொருளும் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்குமாறு உண்மையான சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் அமைப்புகளை தூண்டிவிட்டாலும் கூட தவறில்லை. இவர்கள் சொல்லும் சமத்துவத்தின் பின்னே மறைந்திருக்கும் சூதுக்கள் குறித்து மக்களை எச்சரிக்கைப்படுத்துவதும்கூட ஒரு சமூகநீதி ஆர்வலனின் முக்கிய கடமையாகிறது.

சமத்துவத்திற்கான இளைஞர் குழு என்ற பெயரில் மறைந்திருப்பவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொள்கிறவர்கள் தான். அவர்களிலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு எதிர்ப்புக்குத் தேவையான தத்துவார்த்தப் பின்புலத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சுயசாதி அகங்காரங்களையும் போலிப் பெருமிதங்களையும் உதறிவிட்டு சாதி மறுப்பாளர்களாக செயல்படுகின்றவர்களைத் தவிர அனேகமாக மற்ற பார்ப்பனர்கள் அனைவருமே இடஒதுக்கீடு எதிர்ப்பை தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர். தொழிற்சங்கம், கலை இலக்கியம், பத்திரிகை, அரசியல் கட்சி என்று பல்வேறு சமூக இயக்கங்களில் உற்சாகமாகப் பிறசாதியாரோடு பங்கேற்கும் இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெறும் எந்த இயக்கத்திலும் தென்படுவதில்லை. அது தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கிற மனோபாவம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் ஒரு குட்டி அக்ரஹாரமாக திகழ்ந்த அந்தக் கடந்த காலத்தை எண்ணி அவர்கள் விடும் பெருமூச்சு கூட இடஒதுக்கீடு ஒழிக என்றுதான் அடங்குகிறது.

ஒரு பார்ப்பனர் எந்த அமைப்பில் இயங்கினாலும் இடஒதுக்கீடு பிரச்னை என்று வருகிறபோது தனக்கான தலைமையை வெளியே தேடுகிறவராகிறார். அந்த வகையில் 1902ல் பார்ப்பனரல்லாதாருக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய கோல்காபூர் மன்னர் சாகு மகராஜ் பார்ப்பனருக்கு எதிரியாகவும் அவ்வொதுக்கீட்டை எதிர்த்த திலகர் தலைவராகவும் ஆகிவிடுகின்றனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு வேண்டுமென்று 1890களிலேயே முழங்கிய அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் அவர்களுக்கு முன்பே கோரிய ஜோதிராவ் பூலேவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிய பெரியாரும், தலித்களுக்கும் பழங்குடியினருக்குமான பிரதிநிதித்துவத்தை அரசியல் சட்டப்பூர்வமாக்கிய அம்பேத்கரும் விரோதிகளாகி விடுகின்றனர். சங்பரிவாரத்தை பல காரணங்களுக்காக எதிர்க்கும் பார்ப்பனரும்கூட இடஒதுக்கீடு பிரச்னையில் ஹெட்கேவாரையும் கோல்வால்கரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறவராகிறார். அதாவது அவர் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அரை டவுசரோடு நிற்கவில்லையே தவிர கருத்தளவில் அவ்வமைப்பினராகி விடுகிறார். இடஒதுக்கீடு பற்றிய கருத்தளவிலான இந்த முறிவு அல்லது பிளவு குடும்பம் தொடங்கி இந்திய சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தலித் சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் கூறியது முற்றிலும் உண்மை.

மனிதகுலம் எப்படி தோன்றி பரிணாமம் பெற்றது என்பது குறித்த விஞ்ஞானப்பூர்வமான பார்வை கொண்டிருந்தாலும்கூட, கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்கிற பொருள்படும் பிராமணன் என்ற வர்ணாசிரம வார்த்தையால் தான் அழைக்கப்படுவதையே ஒரு பார்ப்பனர் பெரிதும் விரும்புகிறார். கடைசியாக வந்தவன், இளையவன் என்று பொருள்படும் பார்ப்பு என்ற அழகிய தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு பார்ப்பனர் என்று விளிப்பதை அவமதிப்பென குமைகின்றனர். (மற்ற எந்த அன்னியர்களையும் போலவே பிராமணனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே என்று அம்பேத்கர் சொல்வதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.) எங்கிருந்தோ வந்து கடைசியாக இச்சமூகத்தில் சேர்ந்தவர்கள் என்று தமது பூர்வீகத்தை நினைவூட்டும் அவ்வார்த்தையின் உண்மைத் தன்மையை விடவும் பிராமணன் என்பதன் புராணத் தன்மையை அவர்கள் விரும்புவதற்கு காரணம், அது சமூகத்தில் தங்களுக்கு மிக உயரிய அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொடுத்த வார்த்தை என்பதால்தான். அந்த வார்த்தை உருவான வரலாற்றுப் பின்னணியில்தான் இந்திய சமூக வரலாற்றின் இருளடைந்த பக்கங்கள் வெளிச்சத்திற்கு ஏங்கி மறைந்து கிடக்கின்றன.

எல்லாவற்றையும் காரண காரியத்தோடும் அவை உருவான காலத்தோடும் பொருத்திப் பார்க்கும் தர்க்கப்பூர்வமான அணுகுமுறையையே வலியுறுத்தும் சில பார்ப்பனர்கள்கூட இடஒதுக்கீட்டின் மூலத்தை அறிய வரலாற்றுக்குள் நுழைவதை விரும்புவதில்லை. ஏனென்றால் அங்கே இவர்கள் ரசிக்கத்தக்க எதுவுமேயில்லை. இருப்பதெல்லாம் அவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் தகுதி திறமை பரம்பரை அறிவுத்திறன்களை எப்படி கைக்கொண்டார்கள் என்பதை அம்பலப்படுத்தும் சான்றுகள் மட்டுமே. எப்போதோ நடந்ததைப் பற்றி இப்போதென்ன பேச்சு என்று சொல்வதன் மூலம் கடந்த காலத்தை நிராகரிக்கின்றனர். அதாவது நிகழ்காலத்தில் இருப்பதைப் போலவே காலகாலமாய் எல்லாமும் இருந்ததான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

(தொடரும்)

2 comments:

said...

நல்ல தீர்க்கமான கட்டுரை..

said...

நல்ல பதிவு.

ஊடகங்களின் சார்புத்தன்மையை சரியாக விளக்கியுள்ளீர்.