Tuesday, June 5, 2007

கவிதை: வாழ்க்கை!



அரவமற்ற நிசியில்
நடந்துகொண்டிருந்தேன் வியர்க..வியர்க
பணி முடிந்ததுமே கிளம்பி இருந்திருக்கலாம்
வெட்டி அரட்டையில்
வாதங்கள் சூடுபிடிக்க நேரத்தை விழுங்கிய கடிகாரத்தை கவனிக்கவில்லை

ஆட்சி
அதிகாரம்
வல்லரசு என்று எல்லாம் பேசிப் பேசி அலுத்தபோதுதான்
விடிந்துகொண்டிருக்கிறது என்று உணர்ந்துகொண்டு பிரிந்தோம்

அவ்வப்போது வெளிச்சத்திட்டுக்களை
உமிர்ந்து போனது மோட்டார் வாகனங்கள்
செருப்பில் சத்தம் கேட்டு
முகம் தூக்கிய நாய் அப்படியே படுத்துக்கொண்டது
துரத்தல்களுக்கு ஆளாகி களைத்துப் போயிருக்கலாம்.

சாலைகளின் ஓரத்தில் உறகத்திலிருந்தனர் பலர்
ஒளி குறைந்த அந்த மரத்தினடியில்
ஒருவன் ஒருத்தியை புணர்ந்துகொண்டிருந்தான்

எனக்குள் ஏனோ வல்லரசு விவாதம் நினைவுக்கு வந்தது.

Monday, June 4, 2007

கவிதை: காலத்தின் கோரப்பற்கள்



புட்டத்தை குறிகொண்டு வரும்
நாயென துரத்துகிறது காலம்
வழமை போலவே அதன் கோரப்பற்களுக்குள்
சிக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ரத்தத்தின் சுவையறித்த அதன் நாக்கு
அச்சமேற்படுத்தினும்
உயிர் பயம் உள்ளுக்குள்
வேகத்தைக் கொடுக்கிறது
தூரம் அதிகமில்லையெனினும் வெற்றியின்
இலக்கை அடைந்துவிடும் வரையிலும்
துரத்தலும் ஓடுதலும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.