பெரியார் திரைப்படத்தை இரண்டொரு நாட்களுக்கு முன் போய் பார்த்தேன். என் அளவில் படம் காமராஜர்+ பாரதி அளவிற்கு மோசமில்லாமல் வந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
சிலர் சொல்லுவது போல அத்துனை கேவலமாக படம் இல்லை. 94 வயது வரை வாழ்ந்த ஒரு தலைவர். சுயமரியாதையோடு வாழவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்த ஒருவர். தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத இடம் பிடித்திருப்பவர்.
இத்தனையையும் மீறி.. அவரை ஒரு படத்திலோ, அல்லது மூன்று மணி நேரத்துக்குள்ளோ அடக்கி விட முடியாது என்பது தான் நிதர்சனம். இந்த உண்மையை முதலில் இந்த விமர்சன புலிகள் உணரவேண்டும் என்பது என் அவா!
மூன்று மணிநேரத்துக்குள் முழுமையாக சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வம் குறையல்ல.. ஆனால் ஹாலிவுட் காரர்கள் போல நம்மால் பணம் செலவளிக்க முடிகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
இந்திய மொழிகள் அனைத்திலும் எடுக்கப்பட்ட வரலாற்றுப்படங்கள் எதுவுமே திருப்திகரமாக அமையாததற்கு பணமும் ஒரு காரணம் என்பதை இந்த புலிகள் உணர்வார்களா?
இன்று சீறி எழும் அண்ணன் வேலுபிரபாகரன் கூட காதல் அரங்கம் என்னும் சீன் படம் எடுக்கத்தானே மெனக்கெட்டு வருகிறார். பெரியார் குறித்த திரைவடிவத்தைக்கூட (பொதிகையில்) முதன் முதலில் ஞாநி போன்றோரே எடுக்கவேண்டி இருந்தது.
தமிழுக்கு/தமிழருக்காக குரல்கொடுத்து வருவதாக சொல்லிக்கொள்ளும் அறிவுமதி, சீமான், தங்கர்பச்சன் போன்றோர் ஏன் இதுவரை பெரியார் படத்துக்கான திரைக்கதையைக்கூட செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடையாது நம்மிடம்..?!! (பெரியார் சொல்லியதைவிட குஷ்பு சொன்னது தான் மேசம் என்று வரிந்துகட்டிய பேரன்கள் இவர்கள்!அதன் காரணமாகவே குஷ்பூ காட்சிகளை எடுக்க மறுத்தவர் தங்கர்.)
இல்லை, இன்னொருவர் பெரியார் குறித்து படம் எடுக்கக்கூடாது என்று யாரும் சொல்லிவிட முடியாத போது.. அதற்கான வாய்ப்புகள் இன்னும் மிச்சமிருக்கும் போது.., முயலட்டுமே.. யார் தடுத்தது அவர்களை?!
சினிமாவில் கண்டினியூட்டி மிஸ்டேட் மற்றும் தொழில்நுட்ப குறைகள் நிறைய இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ராமசாமி பெரியார் மகிழ்வான ஓய்வு நேரங்களில்.. வாய்விட்டு பாடும் குணம் கொண்டவர் என்பதாலேயே படத்தில் அவர் பாடுவது போல காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
அப்புறம்.. நாகம்மைக்கு வயதாகவே இல்லை. இளமையாகவே இருக்கிறார் என்றெல்லாம் சொல்லுவது சிரிப்பைத்தான் கொண்டு வருகிறது. (வயதில் கிழவியாகிப்போய், உருவத்தில் இளமையாக எத்தனை பெண்கள் இன்னும் உலா வருகிறார்கள் என்பதை ரங்கநாதன் தெருவில் நின்று வேடிக்கை பார்த்தாலே உணரலாம்)
"பார்ப்பான்" என்ற சொல்லாடல் படன்படுத்ததற்கு காரணம் சென்ஸார் போர்டு தான் என்பதை விபரம் அறிந்த எவரும் மறுக்க முடியாது. அதே சமயம் படத்தில் வரும் ஆதிக்கசாதி என்றும் உயர்சாதி என்ற சொல்லாடல்கள்.. நேரடியாக பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார் எனபதை சொல்லாமல் சொல்லுகின்றபோது.. இவர்களுக்கு ஏன் புரியவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நிர்வாண சங்கத்தில் மெம்பரான காட்சியையும் சென்ஸார் அனுமதி கொடுத்தால் வைத்திருக்கலாம் தான்.
ஆற்று மணல்வெளியில் நண்பர் பட்டாளம் சூழ.. தாசிகளுடன் கொட்டமடித்ததையும்(குருப் செக்ஸ்?!), அங்கு மனைவி நாகம்மையைக்கொண்டே சாப்பாடு எடுத்துவரச்செய்ததையும் கூட காட்டி இருக்கலாம் தான்..
ஆனால்... அப்படி செய்திருந்தால்.. சென்ஸார் போர்டில் கத்திரி விழும். காட்சிகளுக்கு கத்திரி விழுந்தால் ஓகே! வசனங்களுக்கு விழுந்தால்.. டெய்ங்.. சன்ற சத்தமோ.. அல்லது மவுனமாகவோ அந்த காட்சி ஓடும். அதற்கு பதில் இப்போது எடுக்கப்பட்ட காட்சிகளே ஓகே தான்.
பெரியாரைப் பற்றி ஒன்றுமே அறியாதவன் பெரியாரைக் கண்டு இன்னும் காததூரம் ஓடுவான். இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களா?! பின் - நவீனத்துவ பாணியில் விமர்சிக்க உங்களுக்கு ஆயிரம்படங்கள் வெள்ளிக்கிழமைதோறும் வெளிவந்துகொண்டே இருக்கிறதே..! அதனை பிரித்து மேய்ந்துகொள்ளுங்கள்.
பார்ப்பனர்களால் இந்த படத்தின் வெற்றியை இப்போதே தாங்க முடியவில்லை. சில நடுநிலை"வியாதி"களும் அதே நிலையில் இருக்கும் போது இப்படியான திராவகங்களை கொட்டாமல் இருங்கள்.
பெரியார் படத்தை பொறுத்தமட்டில் அவரைப் பற்றிய ஒரு அறிமுகத்திற்கும், தேடுதலுக்குமான விதையை விதைப்பது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதை இந்த படம் முழுமையாக சரியாக செய்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
அப்புறம்..
சாமிசிதம்பரனார் எழுதிய நூலில் 12வயதில் நடந்ததாக சொல்லப்பட தட்டியை தட்டிவிழும் நிகழ்வு.. காலம் மாறி, இடமும் மாறி வந்திருக்கிறது.
நாகம்மை கிணற்றுக்குள் விழுந்து தற்கொலைக்கு முயலும் காட்சிகூட மிகப்படுத்தல் தான்.
நூலின் படி சோற்றுக்குள் தான் மாமிச துண்டுகளை ராமசாமி அமுக்கி வைப்பார்.
ராமசாமிக்கு பெரியார் பட்டம் கொடுத்த நீலாம்பிக்கையம்மையாரைப்பற்றிய செய்திகள் இல்லை.
மூவலுர் அம்மையார் கோபப்பட்டு தி.கவிலிருந்து வெளியே வந்ததையும் காட்டவில்லை.
இப்படி விட்டுப்போன ஆயிரமாயிரம் நிகழ்வுகளைக் கூற முடியும்.
பெரியரை நானும் படித்தவன்+ நேசிப்பவன் என்ற முறையில் எனக்கு படம் மிகுந்த மகிழ்வை கொடுத்தது. இது தேடுதலின் தொடக்கம் என்று உணர்வதே
சிறந்தது.